Followers

Followers

Tuesday, 23 August 2016

ஸ்ரீ.கிருஷ்ண ஜெயந்தி
ஆன்மிக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

1- கிருஷ்ண ஜெயந்தி விரதமுறை!

*காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருத்தல் வேண்டும். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம்.

*கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய் பண்டங்களை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

*பதினாறு வார்த்தைகள் அடங்கிய ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
*பகவத் கீதை படிக்க வேண்டும்.

*கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டும்.

2- சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..

அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போதித்த கீதோபதேசக் கருத்துகள் இங்கு இடம் பெற்றுள்ளன.

*உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும், நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் இந்த பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.

*எல்லா உயிர்களின் இதயத் தாமரையில் கிருஷ்ணனாகிய நானே வீற்றிருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் அனைத்தும் பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகின்றன.

*பச்சிலை, மலர், தண்ணீர் எது வேண்டுமானாலும் அன்புடன் எனக்கு அளித்தால் போதும். அவர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அருள்புரிய தயாராக இருக்கிறேன்.

*குரு என்னும் திறமையான மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்து விட்டால், பிறவிக்கடலை எளிதாக ஒருவனால் கடந்து விட முடியும்.

*மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும், என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பு இரு நிலைகளையும் கடந்தே ஆக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.

*கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.

*மனம் போல போக்கில் மனிதன் வாழ்வது கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

*ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்க வல்லவன் ஞான நிலையை அடைய முடியும்.

*மனிதப்பிறவி மகத்தானது. அதனால் தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து உயர்ந்த ஞானம் அடைய விரும்புகின்றனர்.

*நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்தூய்மை, தன்னடக்கம் ஆகிய நற்பண்புகள் அறிவுடையோரின் அடையாளங்களாகும்.

*தேனீக்கள் பல பூக்களில் இருந்து தேனைச் சேகரிப்பது போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

*உணவு, உறக்கம், உழைப்பு அனைத்திலும் மிதமாக இருப்பவனே சிறந்த மனிதன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் மட்டுமே இருக்கும்.

*வேலையின்றி கணப்பொழுதும் சும்மா இருக்க கூடாது. அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். செயலற்று இருந்தால் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.

*செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய சிந்தனை உண்டாகாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.

*அளவான பேச்சும், உணவில் கட்டுப்பாடும் இருந்து விட்டால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.

*நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவர்களைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்ல முடியும்.

*கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும்.

3- வசுதேவர் – தேவகி பொருள் என்ன?

கிருஷ்ணரை பெற்ற தந்தை வசுதேவர். வசு என்ற சொல்லுக்கு எங்கும் பரவியிருப்பது என்று பொருள். எங்கும் பரவியிருக்கும் தேவனான கிருஷ்ணரைப் பெற்றதால் அவர் வசுதேவர் என பெயர் பெற்றார். கிருஷ்ணரின் தாய் தேவகி. இதற்கு தெய்வீகம் எனப்பொருள். ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்ததால் இந்தப் பெயர் பெற்றாள்.

4- விடாக்கண்டன் கொடாக்கண்டன்!

அவரவர் கருத்தில் உறுதியாக நிற்பவர்களை விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்கள். பாரதப்போரில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இப்படி பேசிக்கொண்டனர். தன் எதிரே நிற்கும் பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட குருமார்களையும், உறவினர்களையும் எதிர்த்து போராட முடியாது என அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சொல்லி விட்டான். அப்படியானால் உன் பெயரான விஜயன் (வெற்றியாளன்) என்பதை இழக்க வேண்டி வருமே என்றார் கிருஷ்ணன். போனால் போகட்டும் என்ற அர்ஜுனனிடம், “அப்படியானால் நீ இழந்த நாட்டை மீட்க முடியாது. உன் சுகமெல்லாம் போய் விடுமே! என்றதும், அதுவும் போகட்டும் என்றான் அர்ஜுனன். தன் வழிக்கு வராத அர்ஜுனனிடம்,“சரி...உன் சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்று கிருஷ்ணர் சொல்லவும், “எங்களுக்குள் அப்படி கருத்து வேறுபாடே வராது. நான் சொல்வதை மற்றவர்கள் நிச்சயம் ஏற்பார்கள், என்றான் அர்ஜுனன். சரி...நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று கிருஷ்ணன் கேட்கவும், “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உனக்கு தெரியாதாக்கும். சரியான ஆளாக இருக்கிறாயே! என் மனதில் மட்டுமல்ல...ஊரில் எல்லார் மனதிலும் என்ன இருக்கிறது என்று அறிந்த நீயா இவ்வளவு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று மடக்கி விட்டான் அர்ஜுனன். ஆம்...எல்லாம் அறிந்த கிருஷ்ணர் நம் மனதில் இருப்பதையும் அறிவார். அதனால் நாம் நல்லதையே நினைப்போம்.
Thursday, 18 August 2016

ஸ்ரீ.பலராமர் அவதாரம்..

ஶ்ரீ பலராமர் அவதாரம்

(இன்று 18-08-2016 ஶ்ரீ பலராமரின் அவதார தினம்)

தேவகி மற்றும் வசுதேவரின் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கம்சன் கொலை செய்தான். தேவகி ஏழாவது முறையாக கர்ப்பவதியான போது கிருஷ்ணரின் வியாபகமான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றினார். தேவகி மிகுந்த மகிழ்ச்சியும், அதே சமயத்தில் வியாகுலமும் அடைந்தாள். அதே சமயம் குழந்தை பிறந்ததும் கம்சன் அதைக் கொன்று விடுவானோ என்பதில் வருத்தம்.

யோகமாயை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பிரதான சக்தியாகும். அவருக்கு பல்வேறு சக்திகள் உண்டென்று வேதங்கள் கூறுகின்றன. "பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே" பல்வேறான சக்திகள் உள்ளும் புறமுமாக இயங்குகின்றன. எல்லா சக்திகளுக்கும் தலையாயது யோகமாயை எனும் சக்தி. எக்காலமும் அலங்கரிக்கப்பட்டிருப்பதும் அழகிய பசுக்கள் நிறைந்ததுமான விரஜபூமியில், விருந்தாவனத்தில் தோன்றுமாறு ஶ்ரீ கிருஷ்ணர் யோகமாயைக்கு கட்டளையிட்டார். விருந்தாவனத்தில் நந்தமகாராஜாவும் யசோதா ராணியும் வசித்த இல்லத்தில் வசுதேவரின் மனைவியருள் ஒருத்தியான ரோகிணி வசித்து வந்தாள். ரோகிணி மட்டுமின்றி, யதுகுல வம்சத்தைச் சேர்ந்த பலர் கம்சனின் கொடுமைகளுக்கு அஞ்சி நாட்டின் பல பாகங்களில் சிதறிப்போயிருந்தனர். அவர்களில் சிலர் மலைக் குகைகளிலும் கூட வசித்தார்கள்.

பிரபுவான கிருஷ்ணர் யோகமாயைக்கு இவ்வாறு கூறினார் : "தற்போது கமசனின் சிறையில் தேவகியும் வசுதேவரும் உள்ளனர். தேவகியின் கர்ப்பத்தில் என் முழு வியாபகமான சேஷன் இருக்கிறான். சேஷனை நீ தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வாயாக. இதன் பிறகு நான் எனது முழு சக்தியுடன் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றப் போகிறேன். அப்போது நான் தேவகி மற்றும் வசுதேவரின் மகனாகத் தோன்றுவேன். நீ விருந்தாவனத்தில் நந்தனுக்கும் யசோதைக்கும் மகளாகப் பிறப்பாயாக."

தனது வெளிப்பாடான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்ததை கிருஷ்ணர் யோகமாயைக்கு கூறினார். தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு பலவந்தமாக இழுக்கப்பட்டதால் "சங்கர்ஷணர்" என்று அழைக்கப்பட்டு, "ரமணம்" எனப்படும் உன்னத ஆனந்தத்தை தரவல்ல ஆன்மீக பலத்தை உடையவர் அவர். எனவே அனந்தர் தோன்றிய பிறகு அவர் சங்கர்ஷணர் என்றும் பலராமர் என்றும் அழைக்கப்பட்டார்.

"நாயம் ஆத்ம பல ஹினேனலப்ய" என்று உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. பலராமரின் போதிய உதவியின்றி ஒருவன் பரம்பொருளையோ வேறு எவ்விதமான ஆத்மானுபவத்தையோ பெற முடியாதென்பது இதன் கருத்து. பலம் என்றால் உடல் பலம் அல்ல. உடல் பலத்தால் யாரும் ஆத்ம பலம் பெற இயலாது. பலராமர் எனும் சங்கர்ஷணர் அளிக்கும் ஆத்மபலத்தின் உதவியால் தான் ஒருவன் ஆத்ம ஞானம் பெறவியலும். அனந்தர் எனும் சேஷர் எல்லாக் கிரகங்களையும் அவற்றின் நிலைகளில் நிலைபெற செய்துள்ளார். பௌதிக விஞ்ஞானம் இதை புவியீர்ப்பு சக்தி என்று அழைக்கிறது. உண்மையில் இது சங்கர்ஷணரின் பலத்தால் நிகழ்வதே. பலராமர் எனும் சங்கர்ஷணர் ஆன்மிக பலம் தரும் மூல ஆன்மீக குரு ஆவார். எனவே பலராமரின் அவதாரமான நித்தியானந்த பிரபு மூல ஆன்மீக குரு ஆவார். ஆன்மீக குரு முழுமுதற் கடவுளாகிய பலராமரின் பிரதிநிதி. அவரிடமிருந்து ஆன்மீக பலம் பெறப்படுகிறது.

"ஸ்ரீ பலராமன் திருவடிகளே சரணம் "

பூணூல் மஹாத்மியம்

பூணூல் மகாத்மீயம்  பற்றி ஒரு சிறுகதை

 { காயத்ரி மந்திரத்தின் பெருமை  }

உபநயனம் என்றால் என்ன

உபநயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்றபொருளில் வரும்.

உப என்றால் அருகே என்றும் நயன என்பது அழைத்துச் செல்வது என்றும் பொருள் கொடுக்கும்.

இந்த உபநயனம் என்பது பூணூல் கல்யாணம் என அழைக்கப் பட்டு மிகச் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும் ஒரு விழாவாக மாறி விட்டது.  

அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு.

ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர்.

எல்லாவற்றிலும் மாறிய நம் கலாசாரம் இதிலும் மாறிவிட்டது.

வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.

இதில் 96 இழைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.

சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.

இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை.

இந்தப் பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர்.

அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.

அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.

இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.

ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.

கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.

ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.

அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.

என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.

அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான்.

சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.

அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.

என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?

ஆம்;  பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.

அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.

ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.

ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த  பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.

என்ன செய்யலாம்?

காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?

அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.

மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.

அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது.

இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.

பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.

அவ்வளவு தானே!

நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

மன்னன் நகைத்தான்.

ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.

பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.

மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது.

தராசும் பத்தவில்லை.

பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.

மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.

சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.

நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.

கலக்கத்துடன் சென்றார் பிராமணர்.

இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.

மன்னன் பொருள் தருவானா மாட்டானா?

ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?

அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே?

நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?

அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?

குறைத்துவிடுவானோ?

பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா?

அதை வைத்து என்ன என்ன செய்யலாம்?

பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.

அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.

காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.

பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.

வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை.

தடுமாறினார்.

ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.

அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.

அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.

என்ன ஆச்சரியம்?

பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?

சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று.

பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று.

அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.  

பிராமணர் அங்கிருந்து  சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே.

சாதுவும் கூட.

இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.

தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.

வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.

அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;

அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.

ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.

ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.

அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.”  என்றான் மந்திரி....👌

Thursday, 11 August 2016

வரலஷ்மி விரதம்


வரம் தரும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வரலட்சுமி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விரதம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°

சாருமதி தன் கணவன், மாமனார், மாமியார் ஆகியோருக்கு வேண்டிய

பணிவிடைகள் செய்வதையே தம் நோக்கமாகக் கொண்டவள்.

வறுமையிலும் பெருமையாக வாழ்வை நடத்தியவள் சாருமதி.

அதனால் அவளிடம் வறுமையே வறுமை அடைந்தது என்று கூற வேண்டும்!

எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறைவனை வணங்கி வந்தாள் சாருமதி.

அவளது பண்பாட்டை எண்ணி மகிழ்ந்த மகாலட்சுமி தாயார்,

சாருமதி சகல செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட அருள்புரிந்தார்.

சாருமதியின் கனவில் தோன்றிய அன்னை மகாலட்சுமி,

"சாருமதி! உன் சிறப்பான பக்தி என் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.

ஆவணி மாதம் பூர்வபட்ச பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று,

என்னை பூஜித்து வழிபாடு செய்வாய்.

அதனால் சகல செல்வங்களும் பெறுவாய்'' என்று வாழ்த்தினார்.

அலைமகளாம் திருமகள் கூறிய விரதமே ஸ்ரீ மகாலட்சுமி விரதமாக மலர்ந்தது.

அலைமகள், கனவில் கூறியவாறு வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டாள் சாருமதி.

வரலட்சுமி விரதம் இருந்ததின் பயனாக,

பதினாறு செல்வங்களையும் பெற்று மகிழ்ந்த சாருமதி,

அந்த விரதத்தை பிற பெண்களும் செய்திட வழிகாட்டினாள்.

கைலாய மலையில் ஒருநாள், சிவபெருமானும் உமா தேவியும்

சொக்கட்டான் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

"  சொக்கட்டான் விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்!'' என்றார் சிவபெருமான்.

ஆனால் உமா தேவியோ, "இல்லை.. இல்லை.. நானே வென்றவள்'' என்றார்.

சிவனும் உமையும் ஆடிய சொக்கட்டான் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த

சித்ரநேமி என்ற கந்தர்வனிடம்,

"வெற்றி பெற்றவர் யார் என்பதை நீயே கூறவேண்டும்''

என்று பணித்தார் சிவபெருமான்.

சித்ரநேமி ""சிவபெருமானே வெற்றி பெற்றவர்'' என்று கூறினான்.

சித்ரநேமி பொய்யாக தீர்ப்புக் கூறியதாக எண்ணி,

"சித்ரநேமி கொடுமையான பெருநோய் பெறட்டும்''

என்று சாபமிட்டார் உமா தேவி.

தன்னை மன்னித்து தனது பெருநோய் நீங்கிடச் சாப விமோசனம் அருளுமாறு வேண்டினான் சித்ரநேமி.

சிவபெருமானும் உமாதேவியிடம் சித்ர நேமிக்காக அருள்புரியுமாறு கேட்டுக்கொண்டார்.

உமாதேவியும் சிவனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

" அன்பான நல்லொழுக்கமுள்ள மாதரசிகள் வரலட்சுமி பூஜை செய்வதைப் பார்க்கும்போது உன் பெருநோய் நீங்கிடும்!''

என்று அருள்புரிந்தார் உமாதேவி.

உமாதேவியின் அருள்படி, வரலட்சுமி விரதம் அனுசரிக்கும் பெண்களைக் கண்டு

தம் தொழுநோய் நீங்கப்பெற்றான் சித்ரநேமி.

நோய் நொடிகள் நீங்கி, நீண்ட ஆயுள் பெறவும் அனைத்துச் செல்வங்களும் பெற்றுக் குடும்பம் செழிக்கவும்,

திருமணத்தடை நீங்கி திருமணம் நிகழவும், பிள்ளைச் செல்வம் பெறவும்

பெண்களால் பெண்கள் நலனுக்காக மலர்ந்ததே வரலட்சுமி விரதமாகும்.

சூதமா முனிவர், பிற முனிவர்களுக்கு பவிஷ்யோத்ர புராணத்தைக் கூறி உபதேசித்தார்.

இந்தப் புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகோன்னத மாண்புகள் கூறப்பெற்றுள்ளன.

அஷ்டலட்சுமிகளையும் மனதில் எண்ணி,

அவர்களின் பிரவேசம் குடும்பத்தில் நிகழ்ந்திட

பெண்கள் நோற்கும் அற்புதமான விரதம் என்றும் இதைக் கூறலாம்.

அழகன் முருகன் அவதாரம் எடுத்திட இந்த வரலட்சுமி விரதத்தைத் தானே மேற்கொண்டு,

முதன் முதலாகத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர் பார்வதி தேவி.

சிரவண மாதம், பூர்வபட்சத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.

அதாவது, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமையில்

இந்த வரலட்சுமி நோன்பை நோற்க வேண்டும்.

காலமாற்றத்தால் ஆடிமாதத்திலும் ஸ்ரீ வரலட்சுமி விரதம் நிகழ்வதும் உண்டு.

இவ்வாண்டு, 12.8.2016 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Wednesday, 10 August 2016

கருடா கருடா


ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார் "இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா...?" என்று.

அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார் "மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு" என்றார்.

மகாவிஷ்ணு "என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.

"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்...? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை...? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்று கூறினார் கருடன்.

"அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்" என்றார் மகாவிஷ்ணு.

கருடன் சொன்னார்
"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு" என்றான்.

மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! "சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார்.

சொல்ல துவங்கினார் கருடன்
"முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் ...
பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான்...

இந்த வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், கூலி வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவு தான்.

இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால்...
பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும், அதன் கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும்.

அது போல ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.

மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால்...
முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால் அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு அவனைக் கவர்ந்து தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான், பிரசவத்திற்கு அனுப்பி விட்டு இவனும் பின்னாலேயே செல்கிறான்.

அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப்பட்டு உன்னை காண முற்படும் வேளையில், உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில் கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், முடிவில் உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய் நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம் ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர் என்றார் கருடன்.

மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தி தன்னுள் ஏற்றுக் கொண்டார்...


Sunday, 7 August 2016