Followers

Followers

Saturday, 10 September 2016

சில கேள்விகள் பதில்கள்..



மகாபாரதத்தை படிக்கும் போதும் சிலர் சொல்லும் சமயம் கேட்கும் போதும் நம் மனதில் விடை கிடைக்காத சில கேள்விகள் வரும். இதுபோல சில கேள்விகளும் அதற்கான பதில்களும்...

1. சந்தனு மனைவி கங்கை என்றால் சிவனின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை யார்?

2. ராமாயணத்தில் தோன்றும் பரசுராம அவரதாரம் எவ்வாறு மகாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர முடியும்?

3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள்? எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்? வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை?

4. விதுரன் மகன்கள் யார் யார்?

5. கிருஷ்ணனுடைய குழந்தைகள் யார் யார்? அவர்களைப் பற்றிய எந்த வரலாற்றையும் ஏன் காண இயலவில்லை?

6. காந்தாரியுடைய நூறு மகன்கள் எந்த முறையில் உயிர் பெற்றனர், எந்த முறையில்வியாசர் கையாண்டார்?

7. பீஷ்மருக்குத் தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தைச் சந்தனுவால் எவ்வாறு தர இயலும்?

8. இறுதியாகக் கடைசி கேள்வி. தீபாவளி பண்டிகை ராமாயணத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் மகாபராதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்களா?

இந்த எட்டு கேள்விக்கு உரிய பதில்கள்
_______________________________

1. சந்தனுவின் மனைவி கங்கை எனில் சிவன் தலை மீது இருக்கும் கங்கை யார்?

* பதில்:

ஓடும் நீரான கங்கைக்கும் சந்தனுவின் மனைவி கங்கைக்கும் உள்ள் தொடர்பு உடல்-ஆன்ம தொடர்பாகும். சந்தனுவின் மனைவியான கங்கை மனித உடலில் இருந்த ஆன்ம கங்கை ஆவாள்.
சிவன் தலையில் கங்கையைத் தாங்கியது கங்கை விண்ணில் இருந்து மண்ணில் பாய்ந்தபோது. கங்கை சிவனின் தலையில் விழுந்து வேகம்தணிந்து மண்ணில் இறங்கினாள்.

ஈரசடையுடன் முடிந்து கொண்டதால் கங்கை சிவன் தலையில் கட்டப்பட்டாள். இது கங்கையின் ஸ்தூல வடிவம்.
தென்னாட்டில் கங்கை சிவனின் மனைவி என்று கதை சொல்லப்பட்டாலும் கங்கைக்கும் சிவனுக்கும் ஒரு போதும் திருமணம் நடக்கவில்லை. விண்ணிலிருந்து மண்ணிற்கு பாய்ந்த கங்கையை சிவன் தலையில் தாங்கி சடைகளின் வழியே மெல்ல வழிந்தோட விட்டு அதன் வேகத்தைக் குறைத்தார். அவ்வளவே.

அதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.
அனைத்து நதிகளுக்கும், மலைகளுக்கும், கோள்களுக்கும் ஸ்தூல வடிவமும் ஆன்ம வடிவமும் உண்டு. அதே போல் தேவர்களுக்கும் உண்டு,
மனிதன் ஒருவன் ஒரு ஆன்மா என்பது நமக்கு தெரியும்.

ஆனால் நதிகள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியவை தம் அம்சங்களை ஆன்மாக்கள் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.
உதாரணமாக கார்த்தவீர்யார்ச்சுனன் விஷ்ணுவின் ஒரு அம்சம் கொண்டவன். பரசுராமர் இன்னொரு அம்சம் கொண்டவர். இராமன், இலக்குவன், பரதன் சத்ருக்கனன் ஆகியோரும் விஷ்ணுவின் அம்சம். கிருஷ்ணனும் பலராமனும் விஷ்ணுவின் அம்சம்.

ஆக ஒரே நேரத்தில் பல அம்ச அவதாரங்கள் உருவாவதும், ஒன்றை ஒன்று அழிப்பதும் கூட சொல்லப்பட்டே இருக்கின்றன. இதில் இராமனும், கிருஷ்ணனும் முழு அவதாரங்கள். அவர்கள் விஷ்ணுவின் பெரும்பாலான அம்சங்கள் கொண்டு பிறந்தனர். மற்றவர்கள் உப அவதாரங்கள் எனப்படுவர். ஆக தெய்வங்கள் தன் ஆன்ம சக்தியை அம்சங்களாக பிற ஆன்மாக்களின் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.

அப்படி அம்சங்கள் கொண்டு பிறக்கும் பிறவியை உப அவதாரம் என்கின்றன புராணங்கள்.அதாவது கங்கையின் அம்ச வடிவம் ஒரு பெண்ணாக வந்தது. இன்றும் ஸ்தூல நதியாக கங்கை ஓடிக் கொண்டுதான் இருந்தது. கங்கை நதியே கங்கா மாயா, கங்கா மாதா, கங்கா தேவியாக வணங்குகிறோம்.
_______________________________

2. இராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் குருவாக வர இயலும்?

* பதில்:

புராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள்

1. பரசுராமர்
2. ஜாம்பவான்
3. அனுமான்
4. விபீஷ்ணன்
5. மஹாபலி
6. மார்கண்டேயர்
7. அசுவத்தாமன்

இவர்களில் அசுவத்தாமனைத் தவிர மற்ற எல்லோருமே இராமயணம் மற்றும் அதற்கு முற்பட்டவர்கள்.

பரசுராமர் பீஷ்மர், கர்ணன் ஆகியோருக்கு குரு, துரோணருக்கு ஆயுதங்கள் வழங்கியவர். கேரளாவின் மலைக்குகையில் இன்னும் வாழ்ந்திருப்பதாக ஐதீகம்.

ஜாம்பவான் இவர் மகள் ஜாம்பவதியை கிருஷ்ணன் மணந்து அவள் மூலம் சாம்பன் என்ற மகனைப் பெற்றார். இவன் கர்ப்பிணி வேஷம் தரித்ததால் துர்வாசரின் சாபம் பெற்றனர் யாதவர்கள்.

அனுமான் பீமனுக்கு பயிற்சி அளித்தார். அர்ச்சுனனின் கொடியில் அமர்ந்தார். எங்கெங்கு இராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகம்.

விபீஷ்ணன் மஹாபாரத காலத்திலும் இலங்கை அரசனாக இருந்தான். இராசசூய யாகத்திற்கு பரிசுகள் அனுப்பினான்.

வாமன அவதாரம் மூலம் அசுர குணம் நீங்க பெற்ற மஹாபலி பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்,

மார்கண்டேயர், முக்திக்காக கலியுக முடிவை எதிர்னோக்கி தவம் செய்துகொண்டிருக்கிறார்.(சில தினங்களுக்கு முன் அவரை பற்றி பதிவிட்டிருந்தேன்)

அசுவத்தாமன், சிரோண்மணி பறிக்கப்பட்டு குரூர ரூபம் கொண்டு இமயமலைச் சாரல்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை.

எனவே இவர்கள் அனைவருமே வைவஸ்வத மன்வந்தரம் முடியும் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
பரசுராமர் பரம்பரையையும் பீஷ்மரின் பரம்பரையையும் அறிந்தால் அவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட என அறிவீர்கள்.
_______________________________

3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள். எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்? வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை?

* பதில்:

உருவாகும் முறை தாம்பத்யம் தான். ஆனால் ரிஷிபிண்டம் இராத்தங்காது. தேவர்கள் – ரிஷிகள் ஆகியோரால் உண்டாகும் கர்ப்பம் ஒரு இரவிற்குள் குழந்தையாக பிறக்கும் என்பது லாஜிக். அப்படித்தான் வியாசர் ஒரே இரவில் பிறந்தார்.
கர்ணனும் பாண்டவரும் அப்படி ஒரே இரவில் பிறந்தவரே.

வியாசருக்கும் – அம்பிகாவுக்கும் த்ருதராஷ்டிரன் முதல் நாள் இரவு பிறந்தான். இரண்டாம் நாள் இரவு வியாசருக்கும் – அம்பாலிகாவுக்கும் பாண்டு பிறந்தான். மூன்றாம் நாள் இரவு வியாசருக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் விதுரன் பிறந்தான்.

இது பூரணமான தாம்பத்ய உறவு என்பதாலேயே அம்பிகா அருவெறுப்பில் கண்களை மூடிக் கொண்டாள். அம்பாலிகா பயத்தில் உடல் வெளுத்தாள். பணிப்பெண் அர்ப்பணிப்புடன் இருந்தாள்.

இதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.அது மட்டுமின்றி பரசுராமர் காலத்தில் இந்த நியதி உண்டானது. தேவர்களாலும், ரிஷிகளாலும் உண்டாகும் கர்ப்பங்களுக்கு தாலிகட்டிய கணவனே தந்தையாக கருதப்படுவான்.

வியாசர் குழந்தைகள் உருவாகவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளை காண ஞான த்ருஷ்டியை வழங்கவும் செய்த வியாசர் ஏன் த்ருதராஷ்டிரருக்கு பார்வை வழங்க இயலவில்லை.

ரிஷிகளோ தேவர்களோ விதியை என்றுமே மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அதில் ஈடுபடுவதால் அவர்களின் சக்தி விரயமாகவே செய்யும். தங்களின் பணியைத் தவிர வேறு எதிலும் அவர்கள் தலையிட மாட்டார்கள்.

அசுரர்களும் மிகச் சிறப்பான தவங்களைச் செய்தவர்களே. அவர்கள் தங்கள் தவப்பயனை விதியை மாற்றுவதில் செலவிட்டதாலேயே அவர்களின் தவப்பயன்கள் எல்லாம் வீணாகின. பலன் கருதா தவம் செய்ததால் ரிஷிகள் உயர்ந்தனர். பலன் கருதி தவம் செய்தவர் அதை மட்டுமே பெற்றனர்.

த்ருதராஷ்டிரன் பிறந்தபோதே பீஷ்மரோ, சத்யவதியோ இந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். ஆனால் வியாசர் மிக இலாவகமாக அதைத் தட்டிக் கழித்தார்.

வியாசர் வெளியேவந்த போது சத்தியவதி வியாசரை சந்தித்து "இளவரசி அம்பிகா பிள்ளையைப் பெறுவாளா?" என்று கேட்டாள்.

அதை கேட்ட வியாசர் "இளவரசி அம்பிகை பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரச முனியாக இருந்து, பெரும் கல்வியும் புத்தி கூர்மையும் சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் அம்பிகையின் தவறால் அவன் குருடாகப் பிறப்பான்." என்று வியாசர் பதிலுரைத்தார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, "ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவன் குருக்களின் ஏகாதிபதியாகும் தகுதியை எப்படிப் பெறுவான்? குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும்? நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்." என்றாள்.

வியாசர் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த இளவரசி அம்பிகா சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள். குருடாக வாழ்வது அவனது விதி என வியாசர் நாசூக்காக சொல்லி விடுகிறார். அதை மாற்றினால் அவரது சொல் பொய்த்து விடுமே. அதனால் யாரும் அதை மாற்றக் கேட்கவும் இல்லை.

த்ருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்வுகளைக் கேட்க சஞ்சயனுக்கு ஞானத்ருஷ்டி வழங்கியது த்ருதராஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே பலர் கருதுகிறார்கள். தன் மகன் செய்த அக்ரமங்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்தவன் தன் மகன் அழிவையும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகப் போய்விட்டது.

த்ருதராஷ்டிரன் போர் தொடங்கும் போது மட்டுமல்ல.. போர் தொடங்கிய பின்னரும் கூட துரியோதனனை இழக்கச் சம்மதித்திருந்தால் (அதாவது துரியோதனனைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தால் – துரியோதனன் தற்கொலை செய்து கொண்டிருப்பான் அல்லது கர்ணன் துணையுடன் போராடி மடிந்திருப்பான்) மிகப் பெரிய அழிவு தடுக்கப்பட்டிருக்கும்.

த்ருதராஷ்டிரன் கடைசி வரை பலமிருந்தும், பலமும் அறிவும் மிக்கோர் துணையிருந்தும், தன் மகனின் சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் அவன் காண விரும்பவில்லை. நன்றாக ஊன்றிக் கவனித்தோமானால், சாபங்களினாலும் இன்னும் பிற பாதிப்புகளாலும் உண்டான குறையை மற்றுமே ரிஷிகள் மாற்றி இருப்பதைக் காணலாம்.

விசுவாமித்திரர் விதியை மீறி திரிசங்குவை சொர்க்கத்துக்கு ஸ்தூல உடலோடு அனுப்ப முயன்று, திரிசங்கு சொர்க்கம் படைத்து தன் தவப்பலனை இழந்தார். எனவே விதியை மாற்றும் சக்தி இருந்தாலும் அதை மாற்றாமல் அடக்கத்துடன் இருப்பவர்களே ரிஷிகளாக இருக்கவே முடியும்.
_______________________________

4. விதுரனின் மகன்கள் யார் யார்?

* பதில்:

ஒரு ஒரு வேற்று ஜாதி பெண்ணுக்கும் மன்னன் தேவகனுக்கும் பிறந்து அழகும் இளமையும் கொண்ட பெண்ணொருத்தி இருப்பதாக கங்கையின் மைந்தன் பீஷ்மர் கேள்விப்பட்டார்.

அவளது தந்தையின் தேவகனின் இருப்பிடத்தில் இருந்து அவளைக் கொண்டு வந்த பீஷ்மர் அவளை, ஞானியான விதுரனுக்கு மணமுடித்தார். விதுரர் அவளிடம் தன்னைப் போல வேத திறமை கொண்ட பல பிள்ளைகளைப்ப
பெற்றெடுத்தார்.

மற்றபடி விதுரனின் வம்சம் அரச வம்சம், ரிஷி வம்சம் அல்ல என்பதால் அவர்களின் பெயர்கள் புராணங்களில் இடம் பெறவில்லை. எத்தனை பேர் என்பதும் குறிப்பிடப்படவில்லை.
_______________________________

5. கிருஷ்ணனின் மகன்கள் யார் யார்? அவர்களைப் பற்றி எந்த வரலாறும் ஏன் காண இயலவில்லை?

* பதிவில்:

கிருஷ்ணன்-ருக்மணி மகன் பிரத்யும்னன், அவனுடைய மகன் அனிருத்தன்
கிருஷ்ணன் ஜாம்பவதியின் மகன் சாம்பன் இவர்களின் குறிப்புகள் மகாபாரதத்தில் உண்டு.

கிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.
கிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். அவர்களின் மகன்கள் பெயரே அறியத்தருகிறது பாகவத புராணம். இவர்களில் மூத்தவன் பிரத்யும்னன். மன்மதன் அம்சம்.

ருக்மணியின் மகன்கள்:
1. பிரத்யும்னன்
2. சாருதேசனன்
3. சுதேஷனன்
4. சாருதேஹன்
5. சுசாரு
6. சாருகுப்தன்
7. பத்ரசாரு
8. சாருசந்திரன்
9. விசாரு
10. சாரு.

சத்தியபாமையின் மகன்கள் :
11. பானு
12. சுபானு
13. சுவபானு
14. பிரபானு
15. பானுமான்
16. சந்த்ரபானு
17. பிரஹத்பானு
18. அதிபானு
19. ஸ்ரீபானு
20. பிரதுபானு.

ஜாம்பவதியின் மகன்கள் :
21. சாம்பன்
22. சுமித்ரன்
23. புருஜித்
24. சதாஜித்
25. சஹரஸ்ரஜித்
26. விஜயன்
27. சித்ரகேது
28. வசுமானன்
29. த்ராவின்
30. க்ருது.

நக்னஜித்தின் மகள் சத்யாவின் மகன்கள் :
31. வீரன்
32. சந்திரம்
33. அஸ்வசேனன்
34. சித்ராகு
35. வேகவான்
36. விருஷன்
37. ஆம்
38. சங்கு
39. வசு
40. குந்தி.

காளிந்தியின் மகன்கள் :
41. சுருதன்
42. கவி
43. விருஷன்
44. வீரன்
45. சுபாகு
46. பத்ரா
47. சாந்து
48. தர்ஷன்
49. பூர்ணமாஷ்
50. சோமகன்

லக்ஷ்மணையின் மகன்கள் :
51. பிரபோதன்
52. கத்ரவான்
53. சிம்ஹன்
54. பலன்
55. பிரபலன்
56. ஊர்த்துவகன்
57. மஹாசக்தி
58. சஹன்
59. ஓஜா
60. அபராஜித்.

மித்ரவிந்தையின் மகன்
61. விருகன்
62. ஹர்சன்
63. அனிலன்
64. க்ருத்ரன்
65. வர்தன்
66. அன்னாடன்
67. மஹேசன்
68. பாவன்
69. வன்ஹி
70. க்சுதி

பத்ராவின் மகன்கள் :
71. சங்க்ரமஜித்
72. ப்ருஹத்சன்
73. சூரப்
74. ப்ரஹாரன்
75. அரிஜித்
76. ஜெயன்
77. சுபத்ரன்
78. வாமன்
79. ஆயு
80. சாத்யகன்

இவர்களில் பிரத்யும்னன் வரலாறும், பேரன் அனிருத்தன் வரலாறும் பாகவத புராணத்தில் கிடைக்கும். சால்வன் துவாரகையை தாக்கியபோது பிரத்யும்னன் சால்வனுடன் போர் செய்தான். சாம்பன், சாருதேசனன் ஆகியோரும் போர் செய்தனர். சாம்பனைப் பற்றி அவன் துர்வாசரின் சாபம் பெற்ற கதை மகாபாரதத்தில் கிடைக்கும். மற்றபடி இவர்கள் அனைவரும் அழிந்ததால் வரலாறு கிடையாது.
_______________________________

6. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர்? எந்த முறையில் வியாசர் கையாண்டார்?

* பதில்:

இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது.

நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.

வியாசரின் முறையும் இதுபோன்ற ஒரு முறையாகவே விவரிக்கப்படுகிறது.
அதாவது வியாசர், தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார்.

அவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலைகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன், புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.
இன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது.

ஆனால் தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர நம்மால் இன்குபேட்டர் தயாரிக்க முடிந்தது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைக்கிறோம். அடுத்த நிலை கரு வளர்ச்சிக்கான சக்திகளை தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கு அளிப்பதாகும். அதன் ஆய்வு நடந்தாலும் வாடகைத் தாய்மார்கள் கிடைப்பதால் மருத்துவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை.
_______________________________

7. பீஷ்மருக்கு, தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயலும்?

* பதில்:

இக்ஷவாகுகுலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன் அஸ்வமேத யாகங்களையும் நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான்.

அதுவுமின்றி கங்கை அவனை விட்டு நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள், அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது.

கற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும். (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)
_______________________________

8. இறுதியான கேள்வி. தீபாவளிப் பண்டிகை இராமாயணத்தில் இருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் மஹாபாரதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்களா?

* பதில்:

மஹாபாரத காலத்தில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இருந்ததாக ஒரு பதிவும் எங்கும் இல்லை. எந்த ஒரு சுபகாரியங்களுக்கும் தீபங்களால் வீடுகளை, தெருக்களை அலங்கரிக்கும் வழக்கம் மாத்திரமே இருந்திருக்கிறது.

தீபாவளி கொண்டாடும் பழக்கம் சமண மதம் வேரூன்றிய பின் தொடங்கிய பழக்கமாகும். மகாவீரர் மறைந்ததை ஒட்டி தீபம் ஏற்றி வீடுகளில் வைக்கும் பழக்கம் தொடங்கப்பட்டது. இந்துக்கள் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் தமதாக்கிக் கொள்வார்கள்.

அதே நாள் இராமன் அயோத்தி திரும்பிய நாளாக கருதப்பட்டதால் இந்துக்களும் அதைக் காரணமாக்கி அதை இந்துத் திருநாளாக மாற்றினர். பின்னர் பாகவத புராணத்தின் நரகாசுரன் கதையின் அடிப்படையில் தமிழகத்தில் தீபாவளி இன்னொரு அவதாரம் எடுத்தது.


19 comments:

  1. //அதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.//

    மிக அழகான விளக்கங்கள்.

    பகிர்வுக்கும் முன்னா பார்க் மூலம் தகவலுக்கும் என் நன்றிகள்.

    நான் முன்னா பார்க்கிலேயே இன்று மூழ்கிப்போய் இருந்ததால் இந்தப்பதிவினை டேஷ் போர்டுக்குப் போய் கவனிக்க முடியாமல் போய்விட்டது. ஸாரி .... ஹாப்பி.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இப்ப வந்துட்டேளே..சந்தோஷம்.

      Delete
  2. புராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள் பற்றியும் அவர்கள் இன்றும் எந்தெந்த ரூபத்தில், எங்கெங்கெல்லாம் எப்படி காட்சியளித்து வருகிறார்கள் என்பது பற்றியும் சொல்லியுள்ளது அழகாகவும் உண்மையாகவும் ஒத்துக்கொள்ளும்படியாகவும் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நானும் புக்ல படிச்சத தானே சொல்லி இருக்கேன்.

      Delete
  3. //இதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.//

    பொதுவாக அந்த நேரத்தில் யாருக்கும் எதையும் நினைக்கத்தோன்றாதே :)))))

    இதனை மிகவும் தாமதமாக எனக்குச் சொல்லியிருக்கிறாய்.

    நீயாவது அதுபோன்ற சமயங்களில் நற்சிந்தனையுடன் இருக்கப் பார்க்கவும். உனக்குத்தான் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. :)))))

    உனக்கு என் இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் + ஆசீர்வாதங்கள்

    ReplyDelete
    Replies
    1. இல்ல பெரிப்பா. என் கல்யாணத்துல பெரிய சிக்கல் இருக்கு மெயில்ல சொல்ல கூட தயக்கமா இருக்கு . இங்கயும் எதுவும் சொல்ல முடியாது...

      Delete
  4. விதுரன் பற்றிய செய்தியும், ஏன் அவனின் வாரிசுகள் பற்றிய செய்திகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் பற்றியும் உன் மூலம் இன்று அறிந்துகொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபு பெரிப்பா நீங்க பெரிய படிப்பாளி.. உங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது. என்னை குஷி படுத்த இப்படி சொல்றேளா..

      Delete
  5. //கிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.
    கிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். //

    அடேங்கப்பா ! இதனைக்கேட்கவே எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது .... அந்த ஸ்ரீகிருஷ்ணன் மேல். :)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இந்த " கோபால" கிருஷ்ண பெரிப்பாவுக்கு அந்த கிருஷ்ணர் மேல பொறாமையா...தாங்காது பெரிப்பா....))))

      Delete
  6. //இன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கிறோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்புகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது.

    நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.//

    நம் வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் போன்றவற்றில் இல்லாத விஞ்ஞான அறிவு வேறு எதிலுமே கிடையாது.

    நம் வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்களில் இல்லாத எதையும் இன்று விஞ்ஞானத்தில் புதிதாகக் கண்டுபிடித்து விடுவது இல்லை.

    அந்த பழமையான வேத சாஸ்திர புராணங்களைப் படிக்காமல், பாதுகாக்காமல், அலட்சியப்படுத்தி வந்துள்ளதால் நாம் இழந்துள்ளவை ஏராளமாகவே உள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமா பெரிப்பா தினுமூலர் சொல்லாத விஷயமே இல்ல. படிக்க படிக்க ஆச்சரியம்தான்

      Delete
    2. ஸாரி...திருமூலர்.....திருவாசகம்னு டைப் பண்ணினா தப்பாயிடுத்து....

      Delete
  7. //கற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும்.//

    உண்மையே. இவற்றையெல்லாம் உன் மூலம் கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

    //(வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)//

    ஆஹா. இதையும் விடாமல் இங்கு சொல்லியிருக்கிறாய். எனக்கும் கட்டிப்பிடி வைத்தியம் என்றால் எப்போதுமே மிகவும் பிடிக்கும். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது பெரிப்பா...

      Delete
  8. கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த பிறகே தீபாவளி என்ற ஒன்று ஆரம்பித்துள்ளதாக நான் அறிகிறேன்.

    அதனாலேயே அதற்கு முந்திய ஸ்ரீ ராமாவதாரத்தில், ஸீதைக்கும் இராமருக்கும் தலை தீபாவளியே கொண்டாட முடியவில்லை என்றும் வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

    ஆனால் நீ இங்கு ஏதேதோ மாற்றிச் சொல்வதாக எனக்குப் படுகிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இல்ல பெரிப்பா நானாக எதுமே சொல்லல படிச்சதை தான் பிடிச்சதைதான் சொல்றேன்

      Delete
  9. இந்த எட்டுக் கேள்விகளுக்கான பதில்களையும் தனித்தனியாக எட்டு பதிவுகளாகக் கொடுத்திருக்கலாம். இது எங்கட ’ஹாப்பி’ போலவே மஹா முரட்டுப்பதிவாக உள்ளது. எனினும் படிக்க சந்தோஷமாகவே ஹாப்பியாகவே உள்ளது.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சின்ன சின்னதா8-- பகுதியா போட்டிருக்கணும் தோணவேல்ல... சொல்லித்தர பெரிப்பா இருக்கும்போது எனக்கென்ன கவலை.ஈஸ்வரோ ரஷது.....

      Delete