Followers

Followers

Friday 28 October 2016

தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க,
      புது துணி உடுத்தி,  மகிழ்ச்சியுடன்
     இந்நாளை நீங்கள் கொண்டாட,
     என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

 “நல்ல எண்ணங்கள்” என்ற
       தீப விளக்கை ஏற்றி வைத்து ,
     “இருள்” என்ற தீமையை அழிப்பதே
    தீபாவளி! என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....

கிரிவலம்....காஞ்சி பெரியவா.(10).நிறைவு...

வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதிராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது? இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை.

கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லுவாளே, அதேமாதிர பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது.

Thursday 27 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா.(9)..

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

Wednesday 26 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(8)..

அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங்கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்தவைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா.

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை. தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். "முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!' சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

Tuesday 25 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(7)..

அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், "என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே... நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணுமாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னு நினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்' சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார்.

கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். "விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்'னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.

Monday 24 October 2016

கிரிவலம்.....காஞ்சி பெரியவா.(6)..

அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக்கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறதுன்னுதான் கேள்வி எழுப்பினார் அவர்.

அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது

Sunday 23 October 2016

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(5)..

பெரியவா என் சொப்பனத்துல வந்து, "நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?'ன்னு கேட்டார்னு சொன்னார்.

உடனே இன்னொருத்தர், "எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?' எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது.

Saturday 22 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(4)..

ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா.

அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார்.

கிரிவலம்...காஞ்சி பெரியவா..(3)..

பௌர்ணமியில திருவண்ணாமலையில கிரிவலம் போறமாதிரி பர்வத மலையை மார்கழி மாசம் ஒண்ணம்தேதி பிரதட்சணம் பண்றது சுத்துவட்டாரத்துல உள்ள கிராமத்து மக்களோட வழக்கம். பரமாசார்யா எப்போல்லாம் அந்தப் பக்கமா போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். தோராயமா முப்பத்தஞ்சு, முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுத்திவர வேண்டியது இருக்கும். ஆசார்யா கூட போறவாள்லாம், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நடப்பா. ஆனா, பெரியவா வழக்கமா சாதாரணப் பாதையில நடக்கறதைவிட ரொம்ப வேகமா, அதேசமயம் கொஞ்சமும் தடுமாறாம அந்த மலைப்பாதையில நடப்பார்.

Thursday 20 October 2016

கிரிவலம்....காஞ்சி பெரியவா..(2).

சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனோட அம்சமாவே வாழ்ந்த பரமாசார்யாளும் அப்படித்தான். எப்பவும் எல்லாரும் நன்னா இருக்கணும். யார் யாருக்கு என்னென்ன தேவையோ அதை தேவை அறிஞ்சு பண்ணணும்கறதையே எப்பவும் சிந்தனையா வைச்சுண்டு இருந்தார்.

திருவண்ணாமலைக்குப் பக்கத்துல காஞ்சி கடலாடின்னு ஒரு கிராமம் இருக்கு. சிங்கம், புலி எல்லாம்கூட உலாவிண்டு இருந்துது. பக்ல்லயே அங்கே போறது ரொம்ப சிரமம். அந்த இடத்துக்குப் பக்கத்துல பெரிய மலைகள் எல்லாம் இருக்கு. அந்த மலைகள்ல ஒண்ணுல பரமேஸ்வரனும், ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கா. அந்த மலைக்குப் பேரு பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர். அம்பாள் பிரமராம்பிகை.

கிரிவலம்.... காஞ்சி பெரியவா... (1)

தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல 
வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!"

(பர்வத மலை கிரிவலம் சம்பவத்தில் நடந்த அற்புதம்)

நன்றி-.2014 மே மாத குமுதம் பக்தி

சர்வேஸ்வரன் சகல ஜீவராசிகளுக்கு படியளக்கறவர். சதா சர்வ காலமும் அவரோட நினைப்பெல்லாம் லோக ரட்சணம் பத்திதான் இருக்கும்னு புராணங்கள் எல்லாம் சொல்றது

Tuesday 11 October 2016

விஜய தசமி

*வெற்றியை உணர்த்தும் விஜயதசமி !*

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் 9 நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி.
நவம் என்றால் ஒன்பது. அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.
மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே இந்த நாள் குறிக்கிறது.
விஜய் - வெற்றி; தசமி - பத்து (தசம் என்றால் பத்து). இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
கொல்கட்டா போன்ற வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜயதசமி அழைக்கப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

எனவே விஜய தசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும்.
குழந்தைகளுக்கு விஜயதசமி தினத்தன்று ஆரம்பக் கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.
தவிர, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவார்கள்.
மைசூரு தசரா பண்டிகையைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது. அங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் இந்த பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.

Saturday 8 October 2016

நவராத்திரி நாயகியர் (6).. நிறைவு..

பட்டாரிகை' என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் 'பிடாரி' என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் 'பட்டாரிகா மான்யம்' என்பதைப் 'பிடாரிமானியம்' என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம்.

இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். 'பேச்சாயி, பேச்சாயி' என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதிதேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக !!!

Thursday 6 October 2016

நவராத்திரி நாயகியர் (5)..

சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம். குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.

குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். 'காத்தாயி' என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்

Wednesday 5 October 2016

நவராத்திரி நாயகியர் (4)

லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங்களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால், ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்து போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக்கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் 'குழந்தையாய் இரு' என்கிறது.

நவராத்திரி நாயகியர் (3)

மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்கு பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.

'பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா' எனறு ஸம்ஸ்கிருத அகராதியான 'அமர கோசம்' சொல்லும். இப்படியே காத்யாயன மகரிஷி சாக்ஷாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பித் தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. துர்க்கைக்கு உரிய காயத்ரியிலே அவளைக் 'காத்யாயனியாக தியானிக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறது

Monday 3 October 2016

நவராத்திரி நாயகியர் (2)

ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.

பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.

நவராத்திரி நாயகிகள்----(1)

நவராத்திரி நாயகியர்

நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ - ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ - கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ - ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் 'பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:' என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:' என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்க்கையாக இருக்கிறபோது, வீரம், சக்தி எல்லாம் தருகிறது. மஹாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது. ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது.